அலெக்ஸ் பாண்டியன் – விமர்சனம்

Posted by By at 12 January, at 19 : 19 PM Print

நடிப்பு: கார்த்தி, அனுஷ்கா, சந்தானம்

இசை: தேவிஸ்ரீபிரசாத்

தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன்

இயக்கம்: சுராஜ்

சகுனி சறுக்கலுக்குப் பிறகு, கார்த்தி சுதாரித்துக் கொண்டிருப்பார் என்று அலெக்ஸ் பாண்டியன் பார்க்கப் போனவர்கள்… தெறித்து ஓடும் அளவுக்கு செய்திருக்கிறார் இயக்குநர் சுராஜ்.

‘தமிழ்ப் படம்’ மாதிரி, ஏதோ எழுபது அல்லது எண்பதுகளில் வெளியான சூப்பர் ஹிட் படங்களைக் கிண்டலடித்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்களோ என்றுதான் ஆரம்பத்தில் தோன்றியது. அப்புறம்தான் தெரிந்தது, படமே அப்படித்தான் என்று!

இன்றைய இளைஞர்கள் விரும்பும் நாயகன், காமெடியன், துள்ளல் இசை எல்லாம் கிடைத்தும் சுராஜ் இப்படி கோட்டை விட்டிருப்பது ஆச்சர்யமாகத்தான் உள்ளது.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு மருந்துகளை கடத்தி வந்து விற்று ஆயிரம் கோடிக்கு மேல் சம்பாதிக்க முனைகிறது ஒரு கும்பல். இதற்கு பணக்கார டாக்டர் மிலிந்த் சோமன், தலைமைச் செயலர் பிரதாப் போத்தன், போலி சாமியார் மகாதேவன் உள்ளிட்டோர் உடந்தை. அனுமதி தரமறுக்கும் முதல்வரை மிரட்ட அவர் பெண்ணையே கடத்த திட்டமிடுகிறார்கள். அப்படி கடத்த வரும் ஹீரோ கார்த்திக்கும் முதல்வர் மகள் அனுஷ்காவுக்கும் காதல் பற்றிக் கொள்கிறது. அப்புறம்தான் ஹீரோவுக்கு நாட்டுக்கு வரும் ஆபத்து புரிகிறது. அப்புறமென்னவென்பதை சுலபத்தில் ஊகித்திருப்பீர்கள் அல்லவா…

இதுநாள் வரை இயல்பாக அறிமுகமாகி, எளிதில் ரசிகர்கள் மனதில் உட்கார்ந்த, கார்த்திக்கு, இதில் ஆர்ப்பாட்டமான அறிமுகம். குத்துப் பாட்டு, பஞ்ச் வசனங்கள் என பொருந்தாத சட்டையைப் போட்டுக்கொண்டு ஆடுவது போன்ற ஒரு தோற்றம். பல நூறு படங்களில் பார்த்துச் சலித்துப் போன இந்த காட்சி அமைப்புகளுக்கு எப்படி கார்த்தி ஒப்புக் கொண்டார் என்று தெரியவில்லை.

அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக பிரகாசிக்க ஆசைப்படுகிறார் கார்த்தி என்பது புரிகிறது. ஆனால் அதற்கான கதை, விறுவிறு திரைக்கதையைத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே் அது சாத்தியமாகும்.

இந்த மாதிரி படங்களில் அனுஷ்காவுக்கு என்ன வேலை? முதலில் பயப்பட வேண்டும். அடுத்து காதல் கனவு காண வேண்டும்… டூயட் பாட வேண்டும். அதையெல்லாம் செய்திருக்கிறார் அனுஷ்கா. ஆனால் ஏனோ டல்லாகவே தெரிகிறார்.. திரிகிறார் படம் முழுக்க.

சந்தானம் இருக்கிறார். ஆனால் அவரது காமெடிக்கு இப்போதெல்லாம் சிரிக்க முடியவில்லை. அது பார்ப்பவர் தவறல்ல!

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை ஒரு பெரிய ஆறுதல்.

ஒளிப்பதிவு சுமார்தான். ஏதோ தெலுங்குப் படம் பார்ப்பது போன்ற உணர்வைத் தருகின்றன காட்சிகளின் டோன்!

ஒரு கம்பீரமான தலைப்பை இப்படி சொதப்பியிருக்க வேண்டாம் சுராஜ்.

பழைய மொந்தை.. ரொம்ப பழைய கள்ளு!

Hot News, சூடானசெய்திகள், திரைவிமர்சனம்

Related Posts

Post Your Comment

You must be logged in to post a comment.